செங்கல்பட்டு அருகே 500 கிலோ குட்கா, கார் பறிமுதல்: வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த தெள்ளிமேடு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் சாலவாக்கம் அடுத்த பேரணக்காவூர் பகுதியை சேர்ந்த முரளி (26) என்பதும், தெள்ளிமேடு பகுதியில் சீனிவாசன் என்பவரது வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், விமல், பான்பராக் உள்ளிட்ட 500 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் மற்றும் ஒரு கார், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பாலூர் போலீசார் முரளியை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சீனிவாசனை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ10 லட்சம் இருக்கும் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: