சர்வதேச செஸ் ஒலிம்பியாட் எதிரொலி ஓட்டல் பிரதிநிதிகளுடன் ஆலோசனை: உணவு பாதுகாப்பு ஆணையர் பங்கேற்பு

மாமல்லபுரம்:  சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 227 அணிகளில், 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். வீரர்கள், வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், ரிசார்ட், தங்கும் விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் 4 குழுக்களாக பிரித்துள்ளனர். இவர்கள், மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து குறைபாடுகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்யவும், உணவை கையாள்பவர்கள் உணவு சமைக்கும் இடத்தை சுத்தம் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளை தனித்தனியாக வைக்கவும், சரியான தட்பவெப்ப நிலையில் வைக்கவும், உணவு கழிவுகளை முறையாக அகற்றவும், குடிநீரை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், ஒருமுறை, பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கியும் ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வினா தலைமையில் ஓட்டல், ரிசார்ட், தங்கும் விடுதி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் நடந்தது. கூட்டத்தில், தரமான உணவு பொருட்களை கொள்முதல் செய்தும், பாதுகாப்பான முறையில் சமைத்தும் வீரர்களுக்கு எவ்வித உடல் நல குறைவு ஏற்படாதவாறு கண்ணியத்துடன் உணவு வழங்க வேண்டுமென அறுவுறுத்தினார். இதனை தொடர்ந்து, உணவு மேற்பார்வையாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு உணவு ஆணைய சுகாதார அலுவலர் முருகானந்தம், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, 11 தாலுகாவை சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் பிரதிநிதிகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வினா 4 நட்சத்திர ரிசார்ட்களில் உள்ள உணவு சமைக்கும் இடத்தினை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Related Stories: