கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று மதியம் கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனையகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 40க்கும் மேற்பட்ட கடைகளை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, காமராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய எத்திலியின் ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரசாயன பொடி கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 9 டன் மாம்பழங்கள் மற்றும் 1 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். பின்னர் ரசாயான கலந்து விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு ரூ15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

*விதிமீறும் வியாபாரிகள்

சமூக ஆர்வலர்கள் கூறும் போது, `ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழம் மற்றும் மாம்பழம் ஆகிய பழத்தில் எத்திலியின் ரசாயனம் தடவி விற்பனை செய்து வருகின்றனர். அதிகாரிகள் அவ்வப்போது இதனை தடுத்து நடவடிக்கை எடுத்தாலும் வியாபாரிகள் தொடர்ந்து ரசாயனம் தடவிய பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். எனவே ரசாயனம் தடவிய பழங்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்து அந்த கடைகளை சீல் வைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோல் தவறுகள் நடக்காது’ என கூறினர்.

*புற்றுநோய் ஏற்படும்

உணவு பாதுகாப்பு துறை  மாவட்ட அலுவலர் சதீஷ்குமார் கூறும்போது, `கோயம்பேடு மார்க்கெட்டில் சமீபகாலமாக எத்திலியின் மூலம் பழுக்க வைத்த 10 டன் வாழைப்பழங்களை பறிமுதல் செய்து வியாபாரிகளிடம் எத்திலியின் மூலம் பழத்தை பழுக்க வைக்க கூடாது என எச்சரித்திருந்தோம். அப்படி இருந்தும் ரசாயனம் தடவி பழத்தை பழக்க வைக்கின்றனர். பழத்தை பொதுமக்கள் சாப்பிட்டால் புற்றுநோய் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படும்’ என கூறினார்.

Related Stories: