திருத்தணி நகராட்சியில் குடிநீர்குழாய் பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். தற்போது திருத்தணி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவரப்பட்டது. இதற்காக ரூ110 கோடி  ஒதுக்கீடு செய்து அதற்காக பணிகள் செய்துவருகின்றனர். தற்போது இந்த கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திருப்பாற்கடல் பகுதியிலிருந்து குழாய்  பதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சி வீதிகளிலும் குழாய் பைப்புகள் பதிக்க பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகளில் பல இடங்களில் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் குழாய் பைப் பதிக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் திருத்தணி நகரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று காந்தி ரோடு வழியாக பள்ளியை நோக்கி சென்றது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு பள்ளி வேன் ஒதுங்கியபோது குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கியதும் மினி பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து விட்டது.

இதனால் அங்கிருந்தவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பள்ளிப் பேருந்து முழுவதுமாக சாயாமல் பாதி சாய்ந்த நிலையில் அது உடனடியாக அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த பள்ளி குழந்தைகளை அவசர அவசரமாக இறக்கினர். மாற்று வண்டியில் குழந்தைகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழாய் பள்ளத்தில் இறங்கிய பேருந்தை மீட்கப்பட்டனர்.   தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளங்கள் தோண்டி சமன் செய்யாமல் விட்டுள்ளனர். மேடு, பள்ளம் இருப்பதால் மழைநீர் தெருக்களில் வரும் கழிவுநீர் பள்ளங்களில் தேங்கி சிறு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது அதிர்ஷ்டவசமாக  குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர். இதே போன்று பல இடங்களில் உள்ளது இது மட்டுமன்றி இந்த குழாய் பதிப்பு மூலம் வீடுகளுக்கு இணைப்பு தருவதற்காக பைப்புகள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த பைப்புகள் சாலையின் மேற்பரப்பில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். அந்த வழியாக வாகனங்கள் வரும்போது பைப்புகள் மீது ஏறி குழாய் பைப்புகள் பல இடங்களில் உடைந்து உள்ளது. எனவே பைப்புகளை உடையாத வண்ணமும் பள்ளி வாகனமும் பேருந்துகள் கார்கள் விபத்துக்கள் சிக்காத வண்ணம் உரிய நடவடிக்கையை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: