திருப்பத்தூரில் ரூ.109.71 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு இந்தியாவுக்கு வழிகாட்டியான திராவிட மாடல் ஆட்சி: 16,820 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திருப்பத்தூர்: இந்தியாவுக்கு வழிகாட்டியான திராவிட மாடல் ஆட்சி என திருப்பத்தூரில் ரூ.109.71 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருப்பத்தூரில் ரூ.109.71 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கலெக்டர் அமர்குஷ்வாஹா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர், அங்கிருந்த கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புதிய கலெக்டர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் நிறைவுபெற்ற புதிய கட்டிடங்களுக்கான பெயர் பலகைகளையும், பல்வேறு புதிய பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தலைவர் கலைஞரின் பாராட்டைப் பெற்றவர்களில் எ.வ.வேலுவும் ஒருவர். அதனால்தான், எதிலும் வல்லவர் வேலு. அதனால்தான் அவர் எ.வ.வேலு என்று நான் குறிப்பிட்டேன். ‘எ’ எதிலும், ‘வ’ வல்லவர். கடந்த 21ம் தேதி விழா நடந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரம், லேசான காய்ச்சல் ஏற்பட்டு, அது முழுமையாக குணமாகாத காரணத்தால், மருத்துவர்கள் ஒருசில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது என்று கேட்டுக்ெகாண்டதால், அந்த குறிப்பிட்ட தேதியில் என்னால் வர முடியவில்லை. ஆனால், இன்றைய நாள் புதிய உற்சாகத்தோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். மருந்து, மாத்திரைகளைவிட மக்கள் முகங்களைப் பார்க்கும்போதுதான், எனக்கு உற்சாகமும் மலர்ச்சியும் ஏற்படுகிறது.

இந்த ஆட்சி எப்படி நடக்கிறது? ஏதாவது குறை இருக்கிறதா? குற்றம் இருக்கிறதா? என்று சொல்லுங்கள் என கேட்டபோது, எந்தக் குற்றமும் கிடையாது, குறையும் கிடையாது, முதலில் நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று தான் சொன்னார்கள்.

கடந்த ஆட்சியாளர்கள், ஒரு திட்டத்துக்கு ஒரு விழா நடத்துவார்கள். ஆனால் நம்முடைய ஆட்சியில் தான், பல்வேறு திட்டங்களுக்கும் சேர்த்து ஒரே விழாவாக நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு திட்டத்திற்கு ஒரு விழா எடுப்பதாக இருந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 365 நாளும், தனித்தனியாக நாம் விழா எடுத்தாக வேண்டும். அந்தளவுக்கு ஏராளமான திட்டங்கள், அந்தத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவசிய, அவசரமான திட்டங்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்து, அதனை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு நாம் தொடர்ந்து செய்துவருகிறோம்.

அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து மக்களின் வளர்ச்சி இது தான் திராவிட மாடல் ஆட்சி, அதைத்தான் இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது. எப்போதுமே இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருந்திருக்கிறது. அரசியல் நெறிமுறைகளை மட்டுமல்ல, ஆட்சியியல் நெறிமுறைகளையும் இந்தியாவுக்கு வழங்கும் வழிகாட்டியாக இந்த அரசு இருக்கிறது. இப்போதும் நாம் அறிமுகம் செய்து வரும் எத்தனையோ நல்ல பல திட்டங்களை பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன.

நாம் தமிழ்நாட்டை ஆண்டாலும், நாம் முன்னெடுக்கும் திட்டங்கள், அமல்படுத்தி வரும் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் அவசியமான, முக்கியமானவையாக அமைந்திருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் வர வேண்டும் என்றால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும். மாநிலத்தை ஆளும் முதலமைச்சராக இருப்பதால், நான் இப்படி சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இதைத்தான் வலியுறுத்தி சொன்னார். ஒரு மாநிலம் வளர வேண்டும் என்று சொன்னால், அந்த மாநிலத்திற்கு உட்பட்டிருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால், மாவட்டங்களை நான் மறந்துவிடவில்லை.

இப்போது, திருப்பத்தூர் மாவட்டத்திற்கான திட்டங்களை அறிவித்திருக்கிறேன். தொடர்ந்து பல்வேறு மாவட்டத்துக்கான திட்டங்களை நான் அறிவிக்க இருக்கிறேன். இப்படி அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்பதை முக்கியமாக நான் நினைக்கிறேன். மாவட்டங்களுக்கான பொதுவான திட்டங்களை அறிவித்தால் போதுமா? அதோடு கடமை முடிந்துவிடுகிறதா? இல்லை! ஒவ்வொரு தனிமனிதருடைய தேவையையும் நிறைவேற்றியாக வேண்டும். அந்த வகையில்தான் அனைத்து மக்களிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றையும் நான் நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம். இந்த இலக்கணத்தில் இருந்து இம்மியளவும் மாறாமல் இந்த ஆட்சி தொடர்ந்து பீடுநடை போடும். அப்படி நடந்தால், ஐந்தாண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாடு நிச்சயம் பெறும். உங்கள் ஒவ்வொருவருடைய குடும்பமும் வளம் பெற வேண்டும். நல்வாழ்வு பெற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நன்றாக கவனியுங்கள், உங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும். படித்த பின்னர் அவர்கள் வேலை தேடித் தவிப்பதை தடுக்கத்தான், சமீபத்தில், மாணவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பிற்கான சிறப்புத் திட்டமான “நான் முதல்வன்” என்ற திட்டத்தை துவக்கியிருக்கின்றேன். “நான் முதல்வன்” என்றால் ஸ்டாலின் மட்டும் முதல்வன் இல்லை. இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேரும் முதல்வர்கள். இளைஞர்கள், மாணவர்கள் அத்தனை பேரும் முதல்வனாக தன்னை கருத வேண்டும்.

முதலமைச்சர் பொறுப்பில் இருக்கின்ற நானும், அரசின் இளநிலைப் பொறுப்பில் இருக்கிற ஓர் அலுவலரும் ஒரே மாதிரியான நோக்கத்துடன் செயல்பட்டால், இந்த அரசு சிறப்பான அரசாக விளங்கிடும். அத்தகைய அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக இதனை மலரச் செய்வோம். மீண்டும் சொல்கிறேன், இது இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக மலரச் செய்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை  மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த்,  சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர்  கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்ட எம்எல்ஏக்கள் சார்பாக முதல்வருக்கு  வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து மக்களின் வளர்ச்சி இது தான் திராவிட மாடல் ஆட்சி.

Related Stories: