ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டி யஷ்வந்த் சின்கா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழகம் வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு திரட்டுகிறார். ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த்  சின்கா அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னைக்கு வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

11 பேர் கொண்ட குழுவுடன் நேற்று கேரளாவில் தனது பரப்புரையை யஷ்வந்த் சின்கா தொடங்கியுள்ளார். 2ம் நாள் பரப்புரை பயணமாக இன்று நண்பகலில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு செய்தியாளர்களையும் சந்திக்கிறார். அன்று இரவு கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் தங்குகிறார். அடுத்த நாள் காலை 10 மணி விமானம் மூலம் ராய்ப்பூர் புறப்பட்டு செல்கிறார்.

Related Stories: