சென்னையில் தெருவுக்கு 3 பேர் என 300 இடங்களில் தொற்று பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் தெருவுக்கு 3 பேர் என 300 இடங்களில் தொற்று பாதிப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரசார நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மாநகர பேருந்தில் பயணித்தோர் உள்பட அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் 8970 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் 95% பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 5% பேர் மருத்துவமனையில் உள்ளனர். முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று ஐம்பதாயிரம் முகக்கவசம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதில் தன்னார்வலர்கள் 150 பேரும் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து 4 மணிநேரம் முகக்கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். வரும் 10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடத்தப்படும்.

நாளை மறுநாள் 23 நடமாடும் “எக்ஸ்ரே” வாகன சேவையை நொச்சிக்குப்பம் பகுதியில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் காசநோய் கண்டறியும் பணியில் இந்த நடமாடும் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு பல மாவட்டத்தில் ஆய்வு செய்ய இருக்கிறோம். சென்னையில் தெருவுக்கு 3 பேர் என 300 இடங்களில் தொற்று பாதிப்பு இருக்கிறது. தெருக்களை தடுப்பு செய்வது அவசியம் இல்லை. அபராதம் வசூலித்து தான் வருகிறோம். எந்த நிகழ்வு நடத்தினாலும் முகக்கவசம் கட்டாயம் தான். அதிமுக பொதுக்குழு நடத்தினால் தடை எதுவும் இல்லை. ஆனால் முறையாக கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

Related Stories: