சாலையோரம் வசிப்பவர்கள் இரவு நேர காப்பகங்களை பயன்படுத்த அறிவுரை சென்னை மாநகராட்சியில் புதிதாக 28 நகர்ப்புற வீடற்றோர் காப்பகம்: பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு

சென்னை: சென்னை மாநகரில் பலர் வீடு இல்லாமல் உணவு இல்லாமல் இரவு நேரங்களில் சரியாக தூக்கம் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் கை குழந்தை முதல் வயதானவர்கள் வரை தவித்து வருகின்றனர். மேலும் ஆதரவற்ற ஆயிரக்கணக்கானோர் வீடின்றி சாலைகளில் வசித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் தினமும் வேலைக்காக சென்னைக்கு பல ஊர்களில் இருந்து பலர் வருகிறார்கள். இவர்களெல்லாம் எங்கு தங்குவது என்று தெரியாமல் பேருந்து, ரயில் நிலையங்களிலும் தங்கி வாழ்க்கையை சென்னையில் ஆரம்பிக்கின்றனர். இப்படி கஷ்டப்படும் மக்களுக்கும், பெற்றோர்களால் கைவிடப்பட்டு குழந்தை தொழிலாளிகளாக உள்ளவர்களை மீட்டு அவர்களுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் இரவு நேர காப்பகம் தொடங்கப்பட்டது.

இதுவரை மொத்தம் 55 இரவு நேர காப்பகங்கள் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், 6 காப்பகங்கள் பெண் குழந்தைகளுக்கும், 5 காப்பகங்கள் ஆண் குழந்தைகளுக்கும், ஆண் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு ஒரு காப்பகம், பெண்களுக்கு 11 காப்பகங்கள், ஆண்களுக்கு 12  காப்பகங்கள், இருபாலருக்கும் ஒரு காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 4 காப்பகங்கள், ஆண் மற்றும் பெண்களுக்கு 13 சிறப்பு காப்பகங்கள், மாற்று திறனாளிகளுக்கு 2 காப்பகங்கள் என பிரித்து மொத்தம் 55 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த காப்பகங்களானது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். நபர் ஒருவருக்கு  50 சதுர அடி இடம் அளிக்கப்பட்டு அவர்களுக்கென பாய், போர்வை, சலவை  செய்வதற்கான பொருட்கள், இவர்களின் பாதுகாப்பு பொருட்களை வைக்க லாக்கர், சுத்தமான முறையில் நீர், காற்றோட்டமான இடம், தூய்மையான குளியல் மற்றும்  கழிப்பறை போன்ற வசதிகள் சென்னை மாநகராட்சி மூலம் இவர்களுக்கு கிடைக்கிறது. மேலும் இவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க சமையல்காரர்கள், இரவு நேரத்தில் பாதுகாக்க காவலர்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் நிர்வகிக்க தகுதியான தொண்டு நிறுவனங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. குறைந்தது ஒரு  காப்பகத்தில் 30 பேர் மற்றும் அதற்கு அதிகமானோர் தங்கும் அளவில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காப்பகத்தில் தங்குபவர்களுக்கு இரவு உணவு மட்டும் வழங்கப்படும்.

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை உணவுக்கென தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த காப்பகங்கள் எல்லாம் கொரானா பேரிடர் காலத்தில் சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த காப்பகங்களில் போதிய வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்தி தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த காப்பங்களை பலர் பயன்படுத்தவில்லை என்பது புள்ளி விபரங்கள் அடிப்படையில் தெரியவந்தது.

இந்நிலையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் இந்த காப்பகங்களை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாலையோரம் வசிப்பவர்களை தேடிச் சென்று இந்த காப்பகங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இதனால் காப்பகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது இந்த காப்பகங்களில் மொத்தம் 1,616 பேர் தங்கி பயனடைந்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி உயரதிகாரிகள் வாரம் ஒரு முறை என இந்த காப்பகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆய்வுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். இதுபோன்ற காப்பகங்கள் சாலையோரம் வசிப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

சென்னை மாநகரப் பகுதிகளில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பதால், கூலி வேலை செய்பவர்கள் பலர் இரவு நேரங்களில் தங்குவதற்கு இடமில்லாமல் சாலையோரங்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும் இந்த காப்பகங்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி சாலையோரம் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் உணவு தேவைகளை கருத்தில் கொண்டு இதுபோன்ற இரவு நேர காப்பகங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அதற்கான உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் எந்தெந்த இடங்களில் இந்த காப்பகங்களை அமைக்கலாம் என்று கள ஆய்வு நடத்தி ஆதரவற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இடங்களை தேர்வு செய்து புதிய காப்பகங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், புதிதாக 28 நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,‘‘நகர்ப்புற வீடற்றோர்களுக்கு சிறப்பு பராமரிப்பு சேவைகள் வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் 55 வீடற்றோருக்கான காப்பகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இக்காப்பகங்கள் தொண்டு நிறுவனங்களின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் 28 புதிய நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், இந்த நிதியாண்டில் 3 புதிய  வீடற்றோருக்கான காப்பகங்கள்  கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி மூலம் ரூ.2.40  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகள் வேகமாக முடிவடையும் பட்சத்தில் சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் உயிரிழப்பு

சென்னையை பொறுத்தவரை சாலையோரங்களில் படுத்திருப்பவர்கள் மீது, சிலர் மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்து அவ்வப்போது விபத்தை ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நகர்ப் புறங்களில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு காப்பகம் ஏற்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள  நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் இதுபோன்ற காப்பகங்களை அமைக்கும் பணி சென்னையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* காப்பகங்களை பயன்படுத்துவோருக்கு சுயதொழில்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 55 நகர்ப்புற வீடற்றோர் காப்பகம் உள்ளது. சாலைகளில் வீடு இல்லாமல் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து, அவர்கள் காப்பகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். சுய தொழில் கற்று கொடுத்து அவர்கள் செய்த பொருட்களும் அரசு நடத்தும் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சாலையோரம் வசிப்பவர்களுக்கு வருமானமும் கிடைப்பதால் இந்த காப்பகங்கள் பயனனுள்ளதாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: