மணலி புதுநகர் அருகே ரூ.15 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆறு சீரமைக்கும் பணி: நீர்வளத்துறை செயலர் ஆய்வு

திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே ரூ.15 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆறு சீரமைக்கும் பணியை நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின்போது பெருக்கெடுத்து வந்த கொசஸ்தலை ஆற்று உபரி நீர் மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல், விச்சூர், கணபதி நகர், லட்சுமி நகர், வடிவுடை அம்மன் நகர் சடையங்குப்பம், இருளர் காலனி போன்ற உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து குடியிருப்புகளிலும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு உடமைகளும் சேதமானது. இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள நீர் சூழ்ந்த இந்த பகுதிகளை அடுத்தடுத்து இரண்டு முறை பார்வையிட்டு உபரி நீரை அகற்றவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும் இனி வரும் காலங்களில் உபரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடாமல் இருக்க கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தி தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதன் அடிப்படையில் நீர்வளத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் பூண்டி ஏரி உபரி நீர் வரக்கூடிய மணலி புதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றில், 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆழப்படுத்தி இருபுறமும் கரைகள் பலப்படுத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் துவக்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, இடையஞ்சாவடி, வடிவுடையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் நின்று திட்ட வரைவு அடிப்படையில் பணிகள் நடைபெறுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த சீரமைப்பு பணிகள் முற்றிலுமாக முடிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

Related Stories: