கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.14.8 கோடியில் டெண்டர்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் வேகமெடுத்துள்ளது. அதன்படி கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.14.8 கோடியில் டெண்டர்  விடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை - பாண்டிச்சேரி செல்லவதற்கு முக்கிய சாலைகளில் ஒன்றாக கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது.  இந்த கிழக்கு கடற்கரை சாலையில் 100க்கும் மேற்ப்பட்ட ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளதால் இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களை வாகனங்களில் ஏற்றுச் செல்வதாலும், பொழுது போக்கு தளங்களான கோவளம் கடற்கரை, மாமல்லபுரம்  கடற்கரை, கோயில்கள் மற்றும் முட்டுக்காடு பகுதிகளில் படகுசவாரிகள்,  நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளதால் கிழக்கு கடற்கரை சாலைகளில் தினந்தோறும் 1.50 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் செல்வதால் இந்த சாலைகள் எப்போது கடும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

அதிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரை சாலைகளில் வழக்கமாக செல்லும் வாகனங்களை விட கூடுதலான வாகனங்கள் செல்வது வழக்கம், மேலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் முதலில் தேர்வு செய்வது பாண்டிசேரி தான், இதனால் வார இறுதி நாட்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அதனால் இப்பகுதியில் ஏற்படும் போக்குரவத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த சாலையை, 6 வழிச்சாலையை மாற்றுவதற்கான அறிவிப்பை கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய அரசு வெளியிட்டு இருந்தது. ஆனால் பணிகள் ஏதும் நடைபெறாமலே  இருந்தது. மேலும் நிலங்களை கையப்படுவத்திலும் காலதாமதம் ஏற்பட்டதால் நீண்ட நாட்கள் ஆகியும் இந்த பணிகள் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக அரசு அமைந்தவுடன் சாலை விரிவாக்க பணிகள் வேகமெடுத்தன. அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை ரூ.135 கோடி செலவில் 6 வழிச்சாலையாக  மாற்றப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட, அக்கரை வரை நான்குவழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்துவது அவசியமாகும். திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் இச்சாலையை அகலப்படுத்துவதற்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள மீதமுள்ள சாலைப் பகுதி ரூ.135 கோடி செலவில் ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தப்படும். மாமல்லபுரத்திற்கு அப்பால் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டு, நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் முக்கியச் சாலையான சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் சந்திப்பில், ரூ.32 கோடியில் சுற்றமைப்புடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில்  நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் வேகம் பெற்றுள்ளது. அதன்படி கொட்டிவாக்கத்திற்கு அருகில் உள்ள சாலையை ரூ.14.8 கோடியில் மேம்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெற்றுள்ளதால், இந்த இடத்தில் உள்ள 1 கிமீ நீளம் ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும். இந்த இடத்தில் தற்போது உள்ள 6-9 மீட்டர் நீளமான சாலையானது, 22 மீட்டராக மாற்றப்படும். தற்போதைய நிலையில், தினமும் 33,900க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இந்த  நெடுஞ்சாலையைப் பயன்படுத்துகின்றன. இதனால் அடிக்கடி நெரிசல் மற்றும் விபத்துகளில் ஏற்படுகிறது. இந்தநிலையில் சாலை விரிவாக்கத்திற்கு பிறகு ஆட்டோக்கள் இந்த நீட்டிப்பை எளிதாக கடக்க  முடியும்.

இப்பணியானது திருவான்மியூர் மற்றும் அக்கரை இடையே ரூ.135 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பெரிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாகும். பாலவாக்கத்தில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 5  மாதங்களுக்குள், கொட்டிவாக்கத்தில் அகலப்படுத்துதல் தொடங்கும். அதன்பின், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்குள் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு இந்த விரிவாக்கம் நீட்டிக்கப்படும்.  இந்த  விரிவாக்க பணிகள் முடிந்தவுடன், வாகன ஓட்டிகள் 20 நிமிடங்களுக்குள் இந்த பகுதிகளைக் கடக்கலாம். மகாபலிபுரத்தைத் தாண்டிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் முகையூருக்கு அருகிலும் பணிகள் தொடங்கிப் பட்டுள்ளன. நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ஒன்றிய அரசு நிலம்  கையகப்படுத்திய 84 தனிப்பட்ட பட்டா நில உரிமையாளர்களில், 64 பேருக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். படகுசவாரிகள்,  நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளதால் கிழக்கு கடற்கரை சாலைகளில் தினந்தோறும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால் இந்த சாலைகள் எப்போது கடும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

Related Stories: