ஓய்வு பெற்ற அதிகாரி உயிரிழந்த விவகாரம் மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னையில் மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் 2 மின்வாரிய ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(61). இவர் மின்வாரிய துறையில் லைன் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்பும் தன்னுடன் மின்வாரியத்தில் பணியாற்றிய நண்பர்களுடன் சேர்ந்து மின் பழுதுகளை சரிசெய்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 21ம் தேதி தலைமைச் செயலக காலனி நம்மாழ்வார்பேட்டை ஏ.கே.சாமி முதல் தெருவில் மின் இணைப்பு பிரச்னையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதனை சரி செய்வதற்காக மின்வாரிய ஊழியர்கள் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணனை உதவிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, தலைமைச் செயலக காலனி பழைய காவல் நிலையம் எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ராதாகிருஷ்ணன் மின் பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராதா கிருஷ்ணனின் மகன் ராஜேஷ்குமார் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணனை மின் பழுதை சரிசெய்யும் பணிக்கு அழைத்துச் சென்றது மின்வாரிய லைன் ஆய்வாளரான சாலமன்(54) மற்றும் வயர்மேன் ஏழுமலை(51) என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் சாலமன் மற்றும் ஏழுமலை ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் இருவரையும் போலீசார் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Related Stories: