கொடநாடு கொள்ளை வழக்கு கோவையில் ஜெயலலிதா கார் டிரைவரிடம் விசாரணை

கோவை: கொடநாடு கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் கோவையில் விசாரணை நடந்தது. நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு தனிப்படையினர் சம்மன் அனுப்பி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் பிரதான கார் டிரைவர் கண்ணன் என்பவரிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அவரிடம் 2வது நாளாக விசாரணை நடந்தது.

கொடநாடு பங்களா, அங்கே சென்று வந்த நபர்கள், பங்களாவில் இருந்த சொத்து ஆவணங்கள், அதை பராமரித்து வந்த நபர்கள், ஜெயலலிதா வைத்திருந்த ஆவணங்களை எடுக்க முயன்ற நபர்கள் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். கண்ணன், கடந்த 1991 முதல் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதும் கண்ணன் உடன் சென்றதாக தகவல் வெளியானது. கொடநாடு பங்களாவிற்கு ஜெயலலிதா, சசிகலா ஓய்விற்கு செல்லும்போதும் கார் டிரைவராக கண்ணன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பங்களாவிற்குள் அனுமதிக்கப்படும் வாகனங்கள், வந்து செல்லும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் குறித்த விவரங்களை கண்ணன் தெரிந்து வைத்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர். கொடநாடு கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுடன் கண்ணனுக்கு தொடர்பு இருக்கிறதா? இந்த வழக்கில் அவருக்கு ஏதாவது இடையூறுகளை யாராவது செய்தார்களா?, கொடநாடு சம்பவத்தின்போது கண்ணன் எங்கே இருந்தார்?, தற்காலிக டிரைவராக கனகராஜ் வந்த பின்னர் என்ன நடந்தது?, கனகராஜ், சயான் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள், அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட வைத்த நபர்கள் குறித்து கண்ணனிடம் விசாரித்தனர்.

* கனகராஜ் மனைவியை மிரட்டியவர் சிறையில் அடைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை மறைக்க துணை போனதாக கனகராஜின் அண்ணன் தனபால் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு காரணம் அவரது மனைவி கலைவாணிதான் என்று கூறி அவரை கனகராஜின் 2வது அண்ணன் பழனிவேல் மிரட்டி மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்து கலைவாணி புகாரின்படி, பழனிவேல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Related Stories: