பரோலில் சென்று தலைமறைவான சென்னை கைதி சேலத்தில் பதுங்கல்: பணம் கேட்ட சிறை அதிகாரி பற்றி விசாரணை

சேலம்: சேலம் சிறையில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி, சேலத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஹரி. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 3 நாட்கள் பரோலில் சென்னைக்கு சென்றார். பரோல் முடிந்து கடந்த 25ம் தேதி மாலை வரவேண்டியவர் திடீரென மாயமானார்.

ஆனால், அன்று மாலை சிறை முன்பு காரில் வந்து ஹரி இறங்குவதும், அவரை சிறை வார்டன் ராமகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்வதும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் வார்டனிடம் விசாரித்தபோது, அஸ்தம்பட்டி வரை செல்ல வேண்டும் என கைதி கூறியதால் அழைத்துச் சென்று அங்குள்ள ரவுண்டானாவில் இறக்கி விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், சென்னை பீர்க்கங்காரணை காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைதியை தேடி வருகின்றனர். அதேபோல் சேலம் சிறை அதிகாரிகள் அமைத்த குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், தலைமறைவான கைதி சேலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவருடன் சிறையில் இருந்த நபர் அடைக்கலம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறை வார்டன்கள் கொண்ட குழுவினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சஸ்பெண்டான வார்டனிடம் கைதி ஹரி, சிறையில் அதிகாரி ஒருவர் பணம் கேட்டதாகவும் அந்த பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அந்த அதிகாரி யார் என்பது குறித்து சென்னை சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த அதிகாரியை கண்காணித்து வருகின்றனர். அவர் யாரிடம் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார், யாருக்கெல்லாம் பரோல் வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளார் என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதி சிக்கினால்தான் முழு தகவலும் வெளியே வரும் என சிறை வார்டன்கள்  கூறுகின்றனர்.

Related Stories: