கோவையில் உள்ள அம்மா ஐஏஎஸ் அகாடமியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கோவை: கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீசார் விசாரணை நடத்தினர். கோவை ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டில் அம்மா ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த அகாடமி இடம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அகாடமியில் விசாரணையை துவக்கினர்.

நேற்றும் 2வது நாளாக விசாரணை நடந்தது. விசாரணையில் அகாடமி நடத்துவதற்கு எங்கு இருந்து நிதி பெறப்பட்டது? எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது? எத்தனை மாணவர்கள் இதுவரை படித்திருக்கிறார்கள்? இந்த அகாடமியில் பணம் வசூல் மற்றும் நிதி கையாளுவதில் முறைகேடு ஏதாவது நடந்துள்ளதா? கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் வெளியூர், வெளிநாடுகளில் பணம் ஏதாவது முதலீடு செய்யப்பட்டு இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒப்பந்தம் எடுப்பதில் முறைகேடு, பல்வேறு பொருட்கள் வாங்கியதில் அதிக தொகை ஒதுக்கீடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அம்மா ஐஏஎஸ் அகாடமியில் போலீசார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: