திருவள்ளூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடல்: வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், முதன்மை தலைமை வன பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், ச.சந்திரன், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஏ.வெங்கடேஷ், கூடுதல் தலைமை வன பாதுகாவலர் வி.நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் கோ.ராம்மோகன் அனைவரையும் வரவேற்றார். அப்பொழுது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது: வனத்துறையை பொறுத்தமட்டில், வனத்துறையால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏதாவது இடையூறுகளோ, பிரச்சனைகளோ அல்லது சாலை வசதிகளோ, தண்ணீர் வசதிகளோ எதுவாக இருந்தாலும் இந்த துறையின் தலைவரிடம் தயக்கமுமின்றி தைரியமாக முழு சுதந்திரத்துடன் தெரிவிக்கலாம். விவசாயிகள் துறை சார்ந்த கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட வனத்துறை அலுவலருடன் கலந்தாலோசித்து நாள் குறிப்பிட்டு, ஆய்வு கூட்டம் நடத்தி அந்த துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக கூட்டத்தில்  காட்டுப்பன்றிகள் மூலம் விவசாய நிலங்களில் ஏற்படும் சேதாரத்திற்கு வழங்கப்படும் இழப்பீடுத்தொகை உயர்த்திதரக்கோரியும், விவசாய நிலங்களுக்கு சூரிய ஒளி மின்வேலி அமைக்க வனத்துறை அனுமதி வழங்கிட வேண்டியும், குரங்குகளால் கிராமபுறங்களில், நகர்ப்புறங்களில் ஏற்படும் இடையூறுகள் நீக்கிடவும் உட்பட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பாக தேவனேரி மற்றும் ஏரிகுப்பம் கிராமங்களின் 6 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளையும், திருவள்ளுர் வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வன உயிரினங்களால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக 7 விவசாயிகளுக்கு ரூ.2,42,075 மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் வனத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், உதவி வன பாதுகாவலர் டி.செசில் கில்பர்ட், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜே.மலர்விழி, வனத்துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

Related Stories: