வேலூரில் பாலாறு பெருவிழா தொடக்கம் சனாதனம் மூலமே உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

வேலூர்: வேலூர் நாராயணி பீடத்தில் பாலாறு பெருவிழாவை தொடங்கி வைத்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, சனாதனத்தின் மூலமே அனைத்து உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும் என்று கூறினார், வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் மற்றும் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் இணைந்து நடத்தும் வேலூர் பாலாறு பெருவிழா நேற்று தொடங்கியது. வரும் 3ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மாநாட்டுக்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்க பொதுச்செயலாளர் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி தலைமை தாங்கினார். ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நதிகளை நாம் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2016ல் பிரதமர் மோடி காற்றாலை, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பல நாடுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். 2015க்குள் 100 ஜிகாவாட்ஸ் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 2021 செப்டம்பரிலேயே அதை அடைந்து விட்டோம். 2030க்குள் இந்தியா 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும், நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள். இதுதான் சனாதனம். பூமியை ஒரு ஆதாரமாக பார்க்கக்கூடாது. அதை வணங்க வேண்டும். அப்படி பார்க்காததால்தான் இன்று காலநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் அடுத்த 25-30 ஆண்டுகளுக்குள் பல சிறிய தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் அரசர்கள் ஏரி, குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என்று இளங்கோவடிகள் கூறியது போல, அம்ரித்சாகர் திட்டத்தின் கீழ் 2023க்குள் நாடு முழுவதும் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள், சுவாமி ராமானந்தா, சுவாமி சிவராமானந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: