விஷவாயு தாக்கி வாலிபர் பலி: கான்ட்ராக்டர் 2 பேர் கைது

திருவொற்றியூர்: தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன்(26), கொளத்தூர் மதனாங்குப்பத்தில் தங்கியிருந்து மாதவரம் மண்டல குடிநீர் வழங்கல் வாரியத்தில் கான்ட்ராக்ட் பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், மாதவரம் மண்டலம் 28வது வார்டுக்குட்பட்ட முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வழங்கல் வாரியத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளர் உத்தரவின்பேரில் நெல்சன் மற்றும் ரவிக்குமார்(40) ஆகியோர் முன்தினம் அடைப்பை சரி செய்ய பாதாள சாக்கடையில் இறங்கினர். அப்போது இருவரும் விஷவாயு தாக்கி இருவரும் அடுத்தடுத்து மயங்கி உள்ளே விழுந்தனர். தகவலறிந்த மாதவரம் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாதாள சாக்கடைக்குள் இறங்கி மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு முதலுதவி செய்தனர்.

இதையடுத்து மாதவரம் போலீசார் இருவரையும் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நெல்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரவிக்குமார் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் விசாரணை செய்து பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் கான்ட்ராக்டர்கள் பிரகாஷ்(53) மற்றும் வினிஸ்(33) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories: