துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: 3800 பேர் தேர்வு எழுதியதில் 137 பேர் தேர்ச்சி; 13ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்

சென்னை: துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் காலியாக உள்ள 66 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. 3800 பேர் தேர்வு எழுதியதில் 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்-4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது.

ஒரு லட்சத்து 31,701 பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முதல்நிலை தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு,  2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 14ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது. இதில் முதன்மை தேர்வுக்கு (மெயின் தேர்வு) தற்காலிகமாக 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடந்தது.இந்த தேர்வை எழுத 3,800 பேர் எழுதினர்.

இந்த நிலையில், மெயின் தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டது. இதில் 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். நேர்முகத் தேர்வு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக வளாகத்தில் வருகிற ஜூலை 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு மெயின் எழுத்து தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களுக்கான முன்பதிவு விதியின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த ஆவணங்களை, அசல் ஆவணங்களுடன் சரிபார்க்கும்போது தவறுகள் இருந்தால், அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும். அடுத்தகட்ட தேர்வுக்கும் அனுமதி அளிக்கப்படாது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எம்.பாஸ்கர் குமார் வெளியிட்ட அறிவிப்பு:  குரூப் 1 தேர்வில் எங்கள் அகாடமி மாணவர்கள் 54க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இலவச மாதிரி நேர்முகத் தேர்வை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் வருகிற 1ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இலவச நேர்முக பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 044-43533445/044-45543082 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

Related Stories: