ரூ.2,516 கோடியில் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் கணினி மயம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினி மயமாக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்காகவும் நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுக்குள் கணினி மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.1,528 கோடி. இதன் மூலம், 13 கோடி சிறு, குறு விவசாயிகள் பலன் அடைவார்கள் என ஒன்றிய அரசு கூறி உள்ளது. இதே போல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனையை கட்டுப்பாடின்றி மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும். இதன் மூலம், அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிலங்களில் இருந்து உள்நாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனையை மேற்கொள்ள முடியும். ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படாது.

Related Stories: