ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்யலாம்: அரசாணை வெளியீடு

சென்னை: ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றாலும், அவர்கள் பணிக்கு தேவைப்படும்பட்சத்தில் அந்த ஆண்டின் இறுதிவரை மறு நியமனம் வழங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும்போது முன்நிபந்தனைகளின் அடிப்படையில் மறு நியமனம் வழங்குவதற்கு அனுமதி அளித்து கடந்த 1959ம் ஆண்டில் ஆணை வெளியிடப்பட்டது. பின்னர், படிப்படியாக அதில் திருத்தம் செய்யப்பட்டு 2018ம் ஆண்டில், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெறும் போது கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் அளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பள்ளிக் கல்வி ஆணையர், 2022-23 கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வி ஆண்டு முடியும் வரை அந்த பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையை தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும், கற்பித்தல் பணி பாதிக்க கூடாது என்பதை கருதியும் கடந்த ஆண்டுகளை போலவே ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வரை  மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்குவதற்கு அனுமதி அளித்து ஆணை  வழங்க அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாணவர்களின் நலன் கருதி 2022-23ம் கல்வி ஆண்டு முதல் கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிகளை பின்பற்றி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க அரசு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இவ்வாறு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: