உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி முறையீடு: பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளதாகவும் தகவல்

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி நேற்று முறையிட்டார். அதில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதால் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் சட்டப்படி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ளதை தொடர்ந்து இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்து, அந்த பதவியில் எடப்பாடியை அமர வைக்க காய்நகர்த்தி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஒற்றைத் தலைமை பதவியை எடப்பாடி கைப்பற்றி விட்டால், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கதை முடிந்தது என்று அஞ்சுகிறார்கள். இதற்கு முன் ஜெயலலிதா, சசிகலா முன் கைகட்டி நின்றதுபோன்று, எடப்பாடி முன் கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஓபிஎஸ் தரப்பினர் கருதுகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டுவர எடப்பாடி திட்டமிட்டிருந்தார். ஆனால், ஓபிஎஸ் நீதிமன்றம் சென்று இதற்கு தடை வாங்கி விட்டார். இதனால், பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஓபிஎஸ் மீது எடப்பாடி ஆதரவாளர்கள் பாட்டில் வீசினர். அவர் பாதியிலேயே கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து மீண்டும் வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பிரச்னை உள்ளிட்ட மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, வருகிற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்தால், எங்கள் தரப்பு (ஓபிஎஸ் அணி) வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டுதான் பொதுக்குழு மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டங்களை கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் தற்போது கூட்டங்கள் கூட்டப்படும் என்று தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இது சட்ட விரோதமானது.

சட்டத்துக்கு புறம்பான முறையில் வருகிற ஜூலை 11ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சுயநலவாதிகள் சிலரால் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே தற்போதைய பிரதிநிதித்துவத்தை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று அனைத்து சட்ட விதிகளையும் மேற்கோள் காட்டி ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் தற்போது எடுத்து வரும் சட்ட நடவடிக்கைகளால் எடப்பாடி அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த பிரச்னையில் தலையிட்டால் வருகிற ஜூலை 11ம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியாமல் போகலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஓபிஎஸ் அணியினரும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவியை விட்டுக் கொடுக்க கூடாது என்றும், வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். தொடர்ந்து நீதிமன்றத்துக்கு சென்று இதற்கு தடை பெற்றே தீர வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்களும் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பினர் நேற்று முன்தினம் ஒரு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘‘அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து அதிமுக சார்பில் எடப்பாடி அணியினர், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதலின் பேரில் தான் கடந்த 14ம் தேதி கூட்டம் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்.

மேலும், கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு ஒப்புதல் பெறப்படாததால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி உள்ளது. (இதற்காக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்). மேலும், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் (எடப்பாடி அணி) தரப்புக்கு ஆதரவாக உள்ளனர். அதன்படி, அதிமுக சட்டவிதிகளின்படி பொதுக்குழு வருகிற 11ம் தேதி கூட்டப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார். இப்படி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் மாறி மாறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருப்பதும் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சட்ட சிக்கல்களால் வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Stories: