×

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா: உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததால் அதிரடி முடிவு; சோனியா, கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி வகுத்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி ஆளுநர் கோஷ்யாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது உருக்கமான உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், இவருடைய அமைச்சரவையில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் தனி அணியாக ஷிண்டே தலைமையில் முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் தங்கினர். பின்னர், அங்கிருந்து அசாம் மாநிலம், கவுகாத்திக்கு சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கினர்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்படி அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். சிவசேனா கட்சியில் மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் 30க்கும் மேற்பட்டோர் எதிரணியில் உள்ளனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா முடிவு செய்தது. இதில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவி காலியாக உள்ள நிலையில் துணை சபாநாயகர் நர்ஹரி ஜெர்வாலிடம், 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும்படி சிவசேனா மனு அளித்தது.

 அதன்படி அந்த 16 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் கடந்த வாரம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி வழக்கை ஒத்திவைத்ததோடு அதுவரையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மேலும் இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் துணை சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் கடந்த 27ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அம்மாநில ஆளுநர் கோய்ஷாரி உத்தரவிட்டுள்ளார். போலியான கடிதம் வெளியானதாக கூறப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் ஆணையிட்டுள்ளார். இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்தவும் சட்டமன்ற செயலருக்கு ஆளுநர் கோஷ்யாரி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில் முன்னதாக மகாராஷ்டிரா ஆளுநரை பாஜ தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளதாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏவான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து இன்று மும்பை திரும்புகின்றனர்.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் ஒரு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகியவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணைக்கு எதிரானதாகும். அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இரு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் நப்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநர் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் அமர்வில் நேற்று மாலை 5மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மப்னு சிங்வி வாதத்தில்,\” உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கவர்னர் திடீரென பெரும்பான்மையை நிரூபிக்க சட்டபேரவைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் எங்களது தரப்பில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு நபர் வெளிநாட்டில் உள்ளார். அப்படி இருக்கும் போது பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க முடியும். அதனால் இந்த விவகாரத்தில் மாநில கவர்னர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது சாத்தியம் கிடையாது. அதேப்போன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் ராய் வக்களிக்க முடியும், அல்லது யார் வாக்களிக்க முடியாது என்பதே இன்னும் முடிவாகவில்லை. குறிப்பாக நாளை(இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமானால் முதலாவதாக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சன் நீதிமன்றம் முதலாவதாக நீக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நபரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் கண்டரிந்து விட்டால் தகுதி நீக்கம் நடத்தப்படும் தேதி வரையில் அந்த குறிப்பிட்ட நபரை சட்டமன்ற உறுப்பினராக கண்டிப்பாக கருத முடியாது. அவ்வாறு இருக்கும் போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்த கொள்ள முடியும். இது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.மேலும் முதலில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அவசர அவசரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் இந்த அழைப்பு தற்போது விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் பெரும்பான்மை இருக்கிறது அல்லது இல்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் ஆலோசனை கேட்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதேப்போன்று இரண்டாவதாக ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் உடனடியாக நீதிமன்றத்தை நாடுகள் என முந்தைய வழக்கு விசாரணையின் பொழுது எங்களுக்கு அனுமதி வழங்கி இருந்தீர்கள். எங்களால் முடிந்த அளவிற்கு விரைவாக வந்திருக்கிறோம். மேலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் அந்த மாநிலத்தின் அமைச்சரவை குழுவின் அறிவுறைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர். எதிர்கட்சிகளின் ஆலோசனைக்கு இணைங்கி நடக்கக்கூடியவர் கிடையாது. உச்ச நீதிமன்றம் முன்னதாக ஜூலை 11ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கி இருக்கக் கூடிய நிலையில் அதுவரையில் ஆளுநரால் காத்திருக்க முடியாதா?. இந்த விவகாரத்தில் இத்தனை அவசரம் ஏன் என்பது புரியவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தா விட்டால் வானமா இடிந்து கீழே விழுந்து விடும்.

இதில் முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தான் ஆளுநர் கொரோனாவில் மீண்டு வருகிறார். இதையடுத்து செவ்வாய்கிழமை மாலை எதிர்கட்சி தலைவரை சந்திக்கிறார். உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுகிறார்.அதனால் ஆளுநரின் இதுபோன்ற செயல்பாடுகள் என்பது அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணையை சுக்குநூறாக ஆக்குவது போன்று உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து எதிர் மனுதாரரான ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல்,‘‘இந்த விவகாரத்தை பொறுத்தவரை முதலில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் பிறப்பித்த துணை சபாநாயகரின் அதிகாரமே கேள்விக்குறியாக உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் அவர் எவ்வாறு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். எங்களது தரப்பில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து உரிமை உள்ளது. அதனால் தற்போது உள்ள பிரச்சனைகளுக்கு ஒரே தேர்வு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தான். குறிப்பாக ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்தாரா அல்லது கட்சி தடை தாவல் சட்டத்தின் நடவடிக்கைகளுக்கு ஆளானாரா என்பது தனிப்பட்ட பிரச்சனையாகும்.

இதில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த விடாமல் குதிரை பேரம் தான் நடக்கும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதற்கும் நீதிமன்றத்தை தான் நாடி வருவார்கள். இதில் உத்தவ் தாக்கரேவை பொறுத்தவரை உச்ச நீதிமன்ற தீர்ப்பு தனக்கு எதிராக வந்தால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள அவருக்கு சக்தி இல்லை. அரசியல் பொறுப்பு மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டவே நம்பிக்கை வாக்கெடுப்பு என்று உச்ச நீதிமன்றமே தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மொத்தமுள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களில் 39பேர் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நம்ம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவர்கள் தயங்குகிறார்கள்.
நாங்கள் சிவசேனா கட்சியை விட்டு போகவில்லை, உன்மையை சொல்ல வேண்டுமானால் நாங்கள் மட்டுமே உன்மையான சிவசேனா கட்சி. இதில் கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை தான் அவர் செய்கிறார். அதில் எந்தவித சட்ட விதிமீறல்களும் கிடையாது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்தார்.

இதையடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,\”சபாநாயகர் ஒரு சட்டபேரவையில் யார் வாக்களிக்க வேண்டும், யார் கூடாது என்பதை முடிவெடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த்,\”எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் என்பது நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும் என கேள்பியெழுப்பினர். இதையடுத்து கவர்னர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தில்,\” இருக்கும் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தவிட்டுள்ளார். இதில் அவருக்கான சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. இதில் பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களுக்கான பெரும்பானமையை வெளிப்படுத்தலாம்.

சுமார் 39 பேர் உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்று எதிர் தரப்பினர் கூறுகிறார்கள், அப்படி இருக்கும் போது எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது தவறாகும். இதில் கவர்னருக்கு வந்த ஏராளமான கடிதங்கள் அவருக்கு திருப்தி அளிக்கும் வைகையில் இருந்ததால் தான் நம்ம்பிக்கை வாக்கெடுப்புக்கே அவர் உத்தரவிட்டார். இதனை நிராகரித்தால் அது வாக்களித்த மக்களுக்கு செய்யும் அடிப்படை தவறாகும். மேலும் சபாநாயகரை நீதிமன்றம் இடைநீக்கம் செய்யவில்லை, மாறாக இயற்கையான சட்டப்பிரிவுகள் தான் இடைநீக்கம் செய்துள்ளது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 288. கடந்த 2019ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது, 169 பேர் சிவசேனா தலைமையலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். சிவசேனா எம்எல்ஏ ஒருவர் இறந்ததை தொடர்ந்து தற்போது எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 288 ஆக உள்ளது. இதில், சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரஸ் 53, காங்கிரஸ் 44, பாஜ 106, பகுஜன் விகாஸ் அகாடி 3, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம், பிரகார் ஜனசக்தி தலா 2, மற்றும் எம்என்எஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தலா 1 சுயேச்சைகள் 13 பேர் உள்ளனர்.

ஆட்சி அமைக்க 144 பேர் இருந்தால் போதும். தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்ைக வாக்கெடுப்பு நடத்தினால் பாஜவுக்கு 170 பேர் வரை ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியடையும் என்ற உறுதியான தகவல்கள் வெளியான நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் ஆளும் அரசுக்கு பாதகமாக அமைந்ததை அடுத்து, உத்தவ் தாக்கரே நேற்று சமூக வலைதளம் மூலம் மக்களிடையே உரையாற்றினார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள், தன்னுடன் பணியாற்றிய அமைச்சர்கள், துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது முதல்வர் பதவியையும், எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

* ராஜினாமா செய்வது ஏன்? உத்தவ் தாக்கரே விளக்கம்
மும்பை: என்னை யாரும் அச்சுறுத்த முடியாது. சிவசேனா தொண்டர்களின் ரத்தம் சாலையில் வழிந்தோடுவதை தடுக்கவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என, உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சமூக வலைதளம் மூலம் உத்தவ் தாக்கரே ஆற்றிய உரை வருமாறு: இந்த முக்கிய தருணத்தில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் முக்கிய கடமையாக நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, விவசாயிகளை கடன் இல்லாதவர்களாக ஆக்கியிருக்கிறேன். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சிவசேனா அமைச்சர்கள் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இருப்பினும், அவுரங்காபாத், ஒஸ்மனாபாத் ஆகியவற்றின் பெயரை மாற்றி வரலாற்று முடிவை எடுத்திக்கிறோம். எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதையும் எதிர்க்கவில்லை.

கவர்னருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கடிதம் கொடுத்த உடனேயே, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.ஆனால், நாங்கள் ஏற்கெனவே பரிந்துரை செய்த 12 எம்எல்சி நியமனங்களுக்கும் இதுபோல் ஒப்புதல் அளித்திருந்தால், அவர் மீதான மரியாதை உயர்ந்திருக்கும். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் நான் மற்றொரு வேண்டுகோளை விடுக்கிறேன். சூரத், கவுகாத்தி போவதை விட்டு விட்டு, அவர்கள் வர்ஷா இல்லம் அல்லது மாதோஸ்ரீக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

ஆனால், அவர்கள் என்னிடம் வந்திருக்க வேண்டும். சிவசேனாவை சேர்ந்தவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றிய ஏஜென்சிகள், படைகள் மும்பையை நோக்கி அனுப்பி வைக்கப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு பணியை விட்டு விட்டு மும்பைக்கு அவர்கள் அனுப்ப்பபட்டனர். ஒரு புதிய ஜனநாயகம் நாளை பிறக்கப்போகிறது. உங்கள் பாதையில் சிவசேனாவை சேர்ந்த யாரும் குறுக்கே வரமாட்டார்கள்.  நான் யாரும் அச்சுறுத்த முடியாது. சிவசேனா தலைவர்கள் சாலையில் வழிந்தோடுவதை தடுக்கவே பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த பதவியை பற்றி நான் கவலைப்படவில்லை. சிவசேனா தொண்டர்களின் ஆதரவை மட்டுமே விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

எம்எல்சி பதவியையும் துறந்தார்
* அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவா சர்வதேச விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் வந்திறங்கினர்.
* பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற ஓட்டலில் பாஜ மாநில தலைவர்  சந்திராகாந்த் பாட்டீல் முன்னாள் முதல்வர் தேவேந்திரபட்நவிசுக்கு இனிப்பு  ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
* இரவு 9.30 மணியளவில் உத்தவ் தாக்கரே பொதுமக்களிடம் உரையாற்றினார்.
* இன்று காலை 9.30 மணிக்கு மும்பை செல்லும் வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் கோவா ஓட்டலில் தங்கியிருப்பார்கள்.
* கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாத என உச்சநீதிமன்றம் அறிவித்த அடுத்த சில நொடிகளில் முதல்வர் பதவியையும், எம்எல்சி பதவியையும் உத்தவ் ராஜினாமா செய்தார்.

Tags : Maharashtra ,Chief Minister ,Uttam Thackeray ,Supreme Court ,Sonia , Maharashtra Chief Minister Uttam Thackeray resigns ahead of no-confidence vote today: Supreme Court rejects ban; Sonia melts, thanking coalition leaders
× RELATED மகாராஷ்டிராவில் கிராமத்தில் பள்ளி...