×

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களின் முன்பக்கமும், பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், பின்புறம் எச்சரிக்கை சென்சார் கருவியை பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகமே பேருந்தில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது.

சில நேரங்களில் பள்ளி வாகனங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வாகனங்களில் நிகழும் அசம்பாவிதங்களை தடுப்பது குறித்து அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பேருந்துகளில் செல்லும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu , CCTV camera in school vehicles, warning sensor device, Government of Tamil Nadu order
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...