காரைக்கால் அம்மையார் கோயிலில் ஜூலை 13-ல் மாங்கனி திருவிழா; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா வரும் ஜூலை 13ம் தேதி நடக்கிறது. காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு, அம்மையார் திருக்கல்யாணம், சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வருகை, சிவபெருமானுக்கு அமுது படையல், கணவர் பிரிந்து செல்லுதல், அம்மையார் சிவபெருமானிடம் ஐக்கியமாகும் உற்சவங்கள் நடத்தப்படும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி மாங்கனி திருவிழா நடந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா இந்தாண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பரமதத்தர் மாப்பிள்ளை அழைப்பு ஜூலை 11ம் தேதி நடக்கிறது. ஜூலை 12ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம், பிஷாடண மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடக்கிறது.

ஜூலை 13ம் தேதி சிவபெருமான் வெட்டிவேர் மாலையுடன் அடியார் வேடத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வீடுகளின் மாடியில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை அடியார் வேடத்தில் வந்த சிவபெருமானுக்கு அம்மையார் அமுது படைக்கும் உற்சவம் நடக்கிறது. இந்த விழாவுக்காக சிலைகள் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல், தேர் சீரமைத்தல், நுழைவு வாயில்கள் அமைத்தல் மற்றும் பந்தல் அமைத்தல் போன்ற பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: