வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு போதை பழக்கம்; தடுப்பு விழிப்புணர்வு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு போதை பழக்கம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இங்குள்ள கைதிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று உலக போதை மறுவாழ்வு தினத்தையொட்டி கைதிகளுக்கு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். சிறை கண்காணிப்பாளர்(பொறுப்பு) அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். அலுவலர் குணசேகரன் வரவேற்றார். சிறை மருத்துவர் பிரகாஷ்ஐய்யப்பன் தொடக்க உரையாற்றினார்.

இதில் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சிறையில் இருந்து வெளியே சென்ற பிறகும் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டது.  இதில், கைதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: