குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம்: தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் காமராஜபுரம்  4-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் மற்றும் ஆழ்குழாய் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதிமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் தாராபுரம் - திருப்பூர் சாலை பூளவாடி பிரிவு சந்திப்பில் காலிக்குடங்களுடன் இன்று காலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் வாகனங்களும் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் மாற்று வழியில் தாமதமாக சென்றன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் குடிநீர் விநியோகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், ஆழ்குழாய் இணைப்பை இன்று சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று அப்பகுதிமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அவ்வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: