நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தை நாட போலீசார் முடிவு

திருவனந்தபுரம்: சாட்சிகளை மிரட்டியது உள்பட ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டியதாக கூறி, நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். கடந்த 85 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ‘’சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது, ஆதாரங்களை அழிக்கக் கூடாது’’ என்பன உள்பட சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

இந்த நிலையில் நடிகர் திலீப் சாட்சிகளை கலைத்ததாகவும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இம் மனு மீது கடந்த சில தினங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. போலீஸ் மற்றும் நடிகர் திலீப் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹனி எம்.வர்கீஸ், குற்றப்பிரிவு போலீசின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இது போலீசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. திலீப்பின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுக குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: