சென்னை வந்த விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்துக்கு கடந்த 18ம் தேதி சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஒரு பயணிகள் விமானம் வந்தது. இதில் 239 பேர் பயணம் செய்தனர். அவர்களுடன் ஜெட்டா நகரில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த 35 வயதான பெண் பயணியும், தஞ்சாவூரை சேர்ந்த 38 வயதான கல்லூரி பேராசிரியரும் பயணம் செய்தனர். இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்தபோது சென்னையை சேர்ந்த பெண் எச்சரித்தும், பேராசிரியர் பலமுறை பாலியல் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அந்த விமானம் அன்று மதியம் சென்னை விமான நிலையத்தில் இறங்கியது. இதுகுறித்து ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் உதவியுடன் அப்பெண் சென்னை விமானநிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியரிடம் போலீசார் விசாரித்தனர். தூக்க கலக்கத்தில் கை தெரியாமல் பட்டுவிட்டது. என்னை மன்னியுங்கள் என பேராசிரியர் கூறியதை தொடர்ந்து, அப்பெண் புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டார். இதுகுறித்து தனக்கு விமானத்தில் நடந்த சம்பவத்தை அப்பெண் தனது வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வைரலாக பரவியது. இதையடுத்து தஞ்சாவூர் பேராசிரியரின் இழிவான செயலை பெண்களின் அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்தன. மேலும், சென்னை பெண்ணை இழிவுபடுத்தியவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் அமைப்பு வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த 22ம் தேதி சென்னையை சேர்ந்த பெண் மீண்டும் விமானநிலைய போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் பாலியல் தொல்லை, பெண்களை இழிவுபடுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியரை தேடி வந்தனர்.

இந்நிலையில், தனது வழக்கறிஞர்களுடன் நேற்றிரவு சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் தஞ்சாவூர் பேராசிரியர் ஆஜரானார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இனிமேல் இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

Related Stories: