புளியந்தோப்பில் கூலி தொழிலாளி கொலையில் 4 பேர் கைது; விசாரணையில் ‘திடுக்’ தகவல்

பெரம்பூர்: புளியந்தோப்பில் கூலி தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவரை 4 மகன்களும் பழிதீர்த்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சென்னை புளியந்தோப்பு, 5வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (எ) ஆதி சுரேஷ் (46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி ஜோதி (40), மகன் புருஷோத்தமன், மகள் கீர்த்தனா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் வேலை முடிந்து புளியந்தோப்பு 1வது தெரு வழியே ஆதிசுரேஷ் நடந்து வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் ஆதிசுரேஷ் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் புளியந்தோப்பு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ஆதிசுரேஷின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், அங்கு புளியந்தோப்பை சேர்ந்த முரளி (எ) பாக்சர் முரளி வந்து சென்றிருப்பது தெரியவந்தது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். விசாரணையில், புளியந்தோப்பு, கிரே நகரில் வசித்தவர் கிருஷ்ணன் (எ) சின்னா.

இவரை கடந்த 2001ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ஆதிசுரேஷ் வெட்டியுள்ளார். இதில் சின்னாவின் இடதுகை படுகாயம் அடைந்து, பாதியாக ஊனமடைந்தது. அன்று முதல் கடந்த 21 ஆண்டுகளாக தனது கையை ஊனப்படுத்திய ஆதிசுரேஷை பழிவாங்க வேண்டும் என பாக்சர் முரளி உள்ளிட்ட 3 மகன்களிடமும் குடிபோதையில் சின்னா புலம்பி வந்திருக்கிறார். இதற்கிடையே சின்னாவின் மூத்த மகன் சதீஷ் (எ) பில்லா சதீஷ் (27), 2வது மகன் முரளி (எ) பாக்சர் முரளி (25), 3வது மகன் தினேஷ் (22) ஆகியோரை தங்கள் பகுதியில் பார்க்கும்போது ஆதிசுரேஷ் அவமானப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புளியந்தோப்பில் இருந்து சின்னா குடும்பத்துடன் வெளியேறி, திருவல்லிக்கேணியில் குடியேறிவிட்டார்.

 அதன்பிறகு வார விடுமுறை நாட்களில் சின்னாவின் 3 மகன்களும் புளியந்தோப்புக்கு வந்து, தங்களின் நண்பர்களுடன் பொழுதை கழித்து சென்றனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு இப்பகுதியில் நடைபெற்ற கேரம்போர்டு போட்டியில் ஆதிசுரேஷை எதிர்த்து சின்னாவின் மகன் பாக்சர் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரை அடித்து, தான் வெற்றி பெற்றதாக ஆதிசுரேஷ் அறிவித்துள்ளார். ஒருகட்டத்தில் ஆதிசுரேஷின் அவமானப்படுத்தும் செயல்களில் ஆத்திரமான சின்னாவின் 3 மகன்கள், ஆதிசுரேஷை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு ஆதிசுரேஷ் வீடு திரும்புவதை ஒரு ஆட்டோவில் சின்னா உள்பட 2 மகன்கள் மற்றும் அவர்களின் நண்பர் ஆகியோர் பின்தொடர்ந்து நோட்டமிட்டனர். பின்னர் புளியந்தோப்பில் ஆதிசுரேஷை வழிமறித்து, 3 பேரும் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரி வெட்டி கொன்றதாக திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இந்நிலையில், ஆதிசுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சின்னா, மகன்களான சதீஷ், பாக்சர் முரளி, திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷின் நண்பர் பிரகாஷ் (எ) முகேஷ் (23) ஆகிய 4 பேரையும் இன்று காலை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவான 3வது மகன் தினேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: