கோயில் பூட்டு உடைத்து உண்டியல் கொள்ளை; அம்பத்தூர் அருகே இருவர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே விநாயகர் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் மேட்டுத்தெரு பகுதியில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும் கோயில் அறையை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் கூறினார்.  அவர்கள் வந்து பார்த்தபோது உண்டியல் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடினர்.

இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29), முத்தூர் பகுதியை சேர்ந்த சல்மான் (26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அம்பத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: