கூடுவாஞ்சேரி அருகே அரசு பெண் அதிகாரி வீட்டில் 32 சவரன் துணிகர கொள்ளை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே அரசு பெண் அதிகாரி வீட்டில் 32 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சி 2வது வார்டு ஏவிஎம் நகரை சேர்ந்தவர் சந்திரா (38). பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் விஜயகுமார் (45). வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 24ம் தேதி சந்திரா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு விருதாச்சலத்தில் உள்ள தனது தாய் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

 இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பினர். முன்பக்க கதவை திறந்துகொண்டு  வீட்டுக்குள் சென்றனர். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். வீட்டுக்குள் பெட்ரூமில்  துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 32 சவரன் தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசில் சந்திரா புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் கொள்ளை நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு, பீரோவில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: