தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த போது துப்புரவு பணியாளர்கள் மீது போதையில் ஆட்டோ மோதிய டிரைவர் கைது

சென்னை: சைதாப்பேட்டையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண் துப்புரவு பணியாளர்கள் மீது குடிபோதையில் ஆட்டோ மோதிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக அதே பகுதியை சேர்ந்த வசந்தி(37), பிரமிளா(39) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சைதாப்பேட்டை பகுதியில் இருவரும் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ ஒன்று 2 துப்புரவு பணியாளர்கள் மோதியது. இதில் படுகாயமடைந்த வசந்தி மற்றும் பிரமிளாவை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருந்ததால் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக உதைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சைதாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் பொழிச்சலூரை சேர்ந்த கோபிநாத்(39) என்றும், இவர் குடிபோதையில் ஆட்டோவை இயக்கி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஆட்டோ டிரைவர் கோபிநாத்தை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: