கொடநாடு கொலை வழக்கு விவகாரம்; ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் மனைவியை மிரட்டிய உறவினர் கைது

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் சாவு வழக்கை வாபஸ் வாங்க கூறி அவரது மனைவியை மிரட்டிய உறவினர் கைது செய்யப்பட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதன் பிறகு, சில நாட்களில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் பலியானார்.

ஆனால், கனகராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி கலைவாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை மறைக்க துணைபோனதாக கனகராஜின் மூத்த அண்ணன் தனபால் உள்பட 2 பேரை கைது செய்தனர். இதனிடையே சென்னையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த கலைவாணியை கனகராஜின் 2வது அண்ணன் பழனிவேல் தொடர்பு கொண்டு சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள பணிக்கனூருக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவ்வாறு வந்தால், கனகராஜூக்கு சொந்தமான சொத்துக்களை விற்று பணம் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய கலைவாணி, தனது அண்ணனுடன் பணிக்கனூருக்கு வந்தார். அங்கு கலைவாணியிடம், `கனகராஜ் சாவு தொடர்பாக நீ கொடுத்த புகாரால்தான் எனது அண்ணன் தனபால் சிறையில் உள்ளார். அவரது வழக்கு தொடர்பாக இதுவரை ₹4 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். எனவே, அந்த வழக்கை வாபஸ் வாங்கினால்தான் சொத்துக்களை விற்று பணத்தை தருவேன்.

முடியாது என்றால் நீ சென்னைக்கு போக முடியாது` என பழனிவேல் மிரட்டல் விடுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலைவாணி கொடுத்த புகாரின்படி, ஜலகண்டாபுரம் போலீசார், கலைவாணியை மிரட்டி மானபங்கம் செய்த பழனிவேல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று இரவு கைது செய்தனர். அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: