நடராஜர் கோயில் நிர்வாகத்தில் இடையூறு தவிர்க்க வேண்டும்; அரசுக்கு தீட்சிதர்களின் செயலாளர் கடிதம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் இடையூறு செய்வதை தவிர்க்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு தீட்சிதர்களின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கடலூர் துணை ஆணையர் கடந்த 22ம்தேதி  சில நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி கோயில் தீட்சிதர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், நடராஜர் கோயில் பொது கோயில் என்பதால் இந்து அறநிலையத்துறை கணக்கு கேட்பதற்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இந்த கடிதத்திற்கு பதில் அளித்து நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், 18 பக்க கடிதம் ஒன்றை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர். அவர்களது பூஜை முறைகள் தனித்துவம் வாய்ந்தது என்பதை குறிப்பிட்டு கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீட்சிதர்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் நிர்வாகத்தில் இந்து அறநிலையத்துறை சட்டத்தின்படி எவ்வித நடவடிக்கையும் ஆய்வுக்குட்படுத்த சட்டத்தில் வழி இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

அரசியல் சாசன பிரிவு 26ன் கீழ் பாதுகாப்பு பெற்ற தனி சமய பிரிவினர் நிர்வாகத்தின் மற்ற பிரிவுகள் பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கு மாறாக தற்போது இந்து சமய அறநிலையத்துறை பொது நிர்வாகத்தில் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் வழிமுறை உள்ளது என்று கூறுவது சட்டப்படி தவறு. இந்து சமய அறநிலையத் துறையினராலேயே தனி சமயப் பிரிவு கோயில் என்று ஒப்புக்கொண்ட பிறகு, நடராஜர் கோயிலில் மீண்டும் மீண்டும் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஆய்வு நடத்த வழி உள்ளது என்று கூறுகிறது.

தற்போது ஆனி மாத உற்சவம் நடைபெறுவதால் பொது தீட்சிதர்கள் உற்சவ நடவடிக்கைகளில் முழுவதுமாக தங்களை அர்ப்பணித்து உள்ளதால், சரிபார்ப்பு அறிக்கை பற்றிய கருத்து தெரிவிக்க கால அவகாசமும் கேட்கப்பட்டுள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் அரசியல் சாசன பாதுகாப்பு பெற்ற தனி சமயப் பிரிவினரால் நிர்வாகம் செய்யப்படும் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: