தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: பொது சுகாதார துறை அறிவுறுத்தல்

சென்னை: தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பொது சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை:

கொரோனா தொற்று சமீப காலங்களில் அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தமிழ் நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம். சென்னை, செங்கல்பட்டு. கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது, கொரோனா தொற்றானது பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல், முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுகிறது.

இதனை கட்டுப்படுத்த  தமிழக முதல்வர்அறிவுறுத்தலின் படி சமூக இடைவெளியை கடைபிடித்தல், வாய் மற்றும் மூக்கை மூடியவாறு சரியான முறையில் முகக்கவசம் அணிதல், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பொது மக்களும் கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க 2020ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி மாதம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த 12.01.2022 அன்று தமிழக அரசால் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டது.  கடந்த ஆண்டு முகக்கவசம் அணியாத 32,77,119 நபர்களிடம் ரூ. 76,00,87,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 இந்த சூழ்நிலையில் பொது மக்கள் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை தங்களை தாங்களே தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொது சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: