கனடாவில் பயங்கரம்; வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி

ஒட்டாவா: கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்கா எல்லை அருகே வான்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்தனர். திடீரென 2 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து போலீசார், வங்கிக்கு விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மர்ம நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மர்ம நபர்கள், 2 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும் 6 போலீசார் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையே மர்ம நபர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அருகே வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வங்கியில் புகுந்த கவச உடை அணிந்திருந்த 2 பேர், அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். 6 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது’ என்றார். ஆனால் அந்த 2 பேர் பற்றிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: