சென்னை: வணிக முத்திரையின்றி பொட்டலத்தில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்புக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது. தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்து விட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டுதான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.