போஸ்டர் யுத்தத்தில் குதித்த சசிகலா ஆதரவாளர்கள்... விஸ்வரூபம் எடுக்கும் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்

சென்னை: அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்திற்கு மத்தியில் சசிகலா தரப்பினரும் களம் இறங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல் உட்சத்தில் இருப்பதை பறைசாற்றும் வகையில் கடந்த சில நாட்களாக போஸ்டர் யுத்தம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் தனித்தனியாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமுதல் இருதரப்பினரும் ஆங்காங்கே போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஒருவரையொருவர் வசைபாடி படங்களை பதிவிடுவது, கருத்துக்களை தெரிவிப்பது என முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் அமைதி காத்து வந்த சசிகலா ஆதரவாளர்களும் திடீர் போஸ்டர் யுத்தத்தில் களம் இறங்கி இருப்பது உட்கட்சி பூசல் விவகாரத்தில் மேலும் பரபரப்பாகி உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளரே! ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே! என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் ஒற்றைத்தலைமை விவகாரங்கள் கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

Related Stories: