தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி விவசாயிகள் போராட்டம்: பருத்திக்கு உரிய விலை கேட்டு சாலை மறியல்..!

ஈரோடு: அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் வேண்டும் என்றே விலை குறைவாக ஏலம் கோரப்பட்டதாக சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு நடைபெற்ற மறைமுக ஏலத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ பருத்தி 115 ரூபாய் வரை ஏலம் போனதாகவும், ஆனால் இந்த வாரம் ஒரு கிலோ பருத்தி 60 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் ஏலம் கோரியதால் ஆத்திரமடைந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பருத்து விவசாயிகள் சத்தியமங்கலம் ஈரோடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வியாபாரிகள் வராததால் வேளாண் ஒருங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெற இருந்த பருத்தி எலாம் திடீரென நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். அங்கு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 8 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக 12 ஆயிரத்துக்கும் விற்பனையாகி உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம், குடவாசல் பகுதிகளில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெற இருந்த பருத்தி ஏலம் முன் அறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பருத்தியை ஏலம் விட எடுத்து சென்ற விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்ற போது பருத்தி குவிண்டாலுக்கு 9 ஆயிரம் ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பருத்திக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கூறி ஒழுங்குறை கூடத்திற்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏலம் மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவித்ததை தொடருந்து சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் விலக்கிக் கொண்டனர். இதனிடையே மயிலாடுதுறையில் வியாபாரிகள் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏலம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மிண்டும் நள்ளிரவில் தொடங்கியது. நள்ளிரவு வரை காத்திருந்த விவசாயிகளின் 50 டன் பருத்தி நள்ளிரவு ஏலம் விடப்பட்டது.

Related Stories: