மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணை!!

மும்பை: மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இக்கட்சியை சேர்ந்த 40 அதிருப்தி  எம்எல்ஏ.க்கள், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இணைந்து, அசாமில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் பாஜக கடிதம் எழுதியுள்ளது. டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு மும்பை திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் பட்நாவிஸ், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து முறையிட்டு கடிதத்தை கொடுத்தார். அதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 39 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தாங்கள் இல்லை என்று தொடர்ந்து கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதையே காட்டுகிறது என்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் பட்நாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில்,  மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டத்தை நாளை காலை 11 மணிக்கு நடத்த சட்டமன்ற செயலருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார். மேலும் நாளைய சிறப்பு பேரவை கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் அணையிட்டுள்ளார். இதனிடையே மும்பையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளதாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Related Stories: