பெயர் பலகை அகற்றம், உருவ பொம்மை எரிப்பு எடப்பாடி- ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பல இடங்களில் மோதல்- பதற்றம்

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு,, உருவ பொம்மை எரிப்பு, பெயர் பலகை அகற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் தலைமை பொறுப்பை பிடிக்கும் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் விடாப்பிடியாக இருக்கிறார். இருதரப்பினருக்கும் ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து நேற்று சேலம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் தலையில் கிரீடம், கழுத்தில் மாலை அணிந்த நிலையில் அவர் வேலை கையில் தூக்கிப்பிடித்தபடி நிற்கிறார். கீழ் பகுதியில் ‘சூரசம்ஹாரம் ஸ்டார்ட்’ என்று எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாநகராட்சி எதிர்கட்சி கொறடா கே.சி.செல்வராஜ் கூறுகையில், ‘‘எதிரியை அழிப்பதற்கு எடப்பாடியார் கையில் வேலை எடுத்துவிட்டார். எதிரி என்பது ஓ.பன்னீர்செல்வமாகவும் இருக்கலாம். பாஜவாகவும் இருக்கலாம். எந்த ரூபத்தில் வந்தாலும் எடப்பாடியார் சூரனை கொன்று வெற்றி பெறுவார் என்பதை குறிக்கும் வகையில் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளோம்,’ என்றார்.

ஊட்டி: ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அதிமுக அலுவலக பெயர் பலகையில் ஓபிஎஸ் படம் இடம் பெற்றிருந்தது. தற்போது, அந்த பெயர் பலகை அகற்றப்பட்டு புதிதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், தலைவர்கள் படங்களுடன் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன.

உருவபொம்மை எரிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் சேதுராமன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அவரது உருவப்பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முதுகுளத்தூர் தொகுதியை பூர்வீகமாக கொண்ட முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதேபோல் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விளக்கு எம்ஜிஆர் சிலை அருகே ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: