தண்டராம்பட்டு அருகே கொடூரம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி கருக்கலைப்பில் பலி: போலி பெண் டாக்டர் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை: பலாத்காரத்தால் பாதித்த 10ம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டதில் அவர் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக போலி பெண் டாக்டர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி, அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். எனவே, தந்தையின் பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்ததும் அதேபகுதியை சேர்ந்த முருகன் (24), அவரது நண்பன் பிரபுவின் (37) உதவியுடன், வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டரிடம் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த அந்த போலி டாக்டர், 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் கருவை கலைக்க கடந்த 2 நாட்களாக ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றுமுன்தினம்  ஊசி செலுத்தியபோது, சிறுமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவலின்படி தானிப்பாடி போலீசார் நேற்று அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய கூலித்தொழிலாளி முருகன் பாலியல் பலாத்காரம் செய்ததும், சிறுமி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து நண்பரான பிரபு உதவியுடன் போலி டாக்டரான காந்தி(65)யிடம் கருக்கலைக்க அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. போலீசார் போலி டாக்டர் காந்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. புகாரின்பேரில், தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, போலி டாக்டர் காந்தியை கைது செய்தனர். கருக்கலைக்க உதவியாக இருந்த பிரபு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: