கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்; ஏடிஎம்மில் கொள்ளையடிக்க டிரைவரை கொலை செய்து காரை கடத்தினோம் ; கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த அரசன்கழனி பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் அர்ஜுன் (30). இவர், மர்ம நபர்களால், கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு செங்கல்பட்டு வல்லம் பேருந்து நிலையம் அருகே சடலமாக கிடந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து, தப்பியோடிய  குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், அந்த கார் நிறுவனத்தில் புக்கிங் செய்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

அதில், முக்கிய குற்றவாளியான பெரம்பலூர் மாவட்டம் கரியனூரை சேர்ந்த பிரசாத் (26) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அந்த வேலையில் சரிவர ஊதியம் கிடைக்காததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள பலாப்பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பிரசாத்தின் ஊரை சேர்ந்த திருமூர்த்தி (22), கட்டிமுத்து (25) மற்றும் இருவருடன் சேர்ந்து விழுப்புரம் அருகே உள்ள ஏடிஎம் மெஷினை உடைக்க திட்டம் தீட்டி உள்ளனர்‌. அதற்கு, முதலில் காரை திருட திட்டமிட்டு கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் மெப்ஸ் வரை காரை புக் செய்து காரில் ஏறியுள்ளனர்.

அந்த காரில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் வேகம் குறைவாக இருந்துள்ளது. அதனால்,  தாம்பரம் மெப்ஸ்சில் இறங்கிய கொலையாளிகள் வேறு ஒரு காரை புக் செய்துள்ளனர். அப்போது அவர்களை ஏற்றி சென்ற காரை அர்ஜூன் ஓட்டி வந்துள்ளார். அப்போது, காரில் ஏறிய அவர்கள் செங்கல்பட்டு வந்ததும் அர்ஜுனை காரை விட்டு இறங்கி ஓடுமாறு கூறியுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள், அர்ஜூனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரது காரில் தப்பியோடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த காரும் வேகம் குறைவாகவே இயங்கியதால் அதை மேல்மருவத்தூர் அருகே நிறுத்தி விட்டு பேருந்தில் ஏறி 5 பேரும் தப்பி சென்று வழக்கம் போல தங்களது ஊரில் பதுங்கினர். இதனிடையே, அங்கு சென்ற தனிப்படை போலீசார் மூவரையும் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.  ஏடிஎம்மை கொள்ளையடிப்பதற்காக காரை திருட முயன்ற போது, கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: