ஆயுள் தண்டனை கைதி தப்பிக்க உதவிய சேலம் மத்திய சிறை வார்டன் சஸ்பெண்ட்: காவல்துறை நடவடிக்கை

சென்னை: சேலம் மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதியை பைக்கில் ஏற்றி சென்று தப்பிக்க உதவிய இரண்டாம் நிலை காவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, சிறைத்துறை டிஜிபி நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘சேலம் மத்திய சிறையில் சிறைக்கு திரும்பி வந்தவரை பணத்துக்காக பைக்கில் அழைத்து சென்ற வார்டன்’ என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து நடத்திய விசாரணையில், ஆயுள் தண்டனை சிறைவாசி ஹரி என்ற ஹரி கிருஷ்ணன் என்பவரின் தாயார் வேண்டுகோளுக்கிணங்க மூன்று நாட்கள் அவசரகால விடுப்பு 22.6.2022 முதல் 24.6.2022 வரை வழங்கப்பட்டதும், மேற்கண்ட சிறைவாசி 25.6.2022 அன்று மீள சேலம், மத்திய சிறை அருகில் கால் டாக்சி மூலம் வந்ததாகவும், அச்சிறைவாசியை கண்ட இரண்டாம் நிலைக் காவலர் ராமகிருஷ்ணன் மேற்படி சிறைவாசியை தனது இரு சக்கர வாகனம் மூலம் அஸ்தாம்பட்டி ரவுண்டானாவில் இறக்கி விட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்பாக இரண்டாம் நிலைக் காவலர் ராமகிருஷ்ணன், 27ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், தப்பிச்சென்ற ஆயுள் தண்டனை சிறைவாசியை மீள கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: