கூடங்குளத்தில் அணுஉலைக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கூடாது: மதிமுக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: கூடங்குளத்தில் அணுஉலை கழிவு சேமிப்பு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நேற்று தாயகத்தில் நடைபெற்றது. மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மதிமுக பொது செயலாளர் வைகோ, துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மதிமுக மாநாடு நடத்தி அண்ணா பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநாடு நடத்த இயலாத சூழலில், வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா 114வது பிறந்தநாள் விழா சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்தப்படும். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்காவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஜூலை 7ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3வது மற்றும் 4வது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: