அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறுவதில் சிக்கல் இரட்டை இலையை முடக்க ஓபிஎஸ் திட்டம்? எடப்பாடி அணியினர் அதிர்ச்சி

சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நாளுக்கு நாள் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கட்சி நிர்வாகிகள் கூட்டம், பொதுக்குழு கூட்டப்படுவதை எதிர்த்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். இதனால், அதிமுக கட்சி மற்றும் சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை மாற்றி ஒற்றைத் தலைமை (பொதுச்செயலாளர்) பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் எடப்பாடி முயற்சிக்கு ஓபிஎஸ் தரப்பினர் தடை வாங்கினர்.

இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான மோதல் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. பொதுக்குழு மேடையிலேயே ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும். அதில், ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாக சி.வி.சண்முகம் கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவது பற்றி ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவிக்காததுடன், அவரது அனுமதியும் கோரப்படவில்லை. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்சிடம் இருந்து பொருளாளர் பதவியை பறிப்பது” என்ற தீர்மானம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக கட்சியில் இருந்து படிப்படியாக தன்னை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டி வருவதால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு கடிதம் எழுதினார்.

அதில்,‘‘சட்டத்துக்கு புறம்பான முறையில் வருகிற ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சுயநலவாதிகளாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே தற்போதைய பிரதிநிதித்துவத்தை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று அனைத்து சட்ட விதிகளையும் மேற்கோள் காட்டி ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் தற்போது எடுத்து வரும் சட்ட நடவடிக்கைகளால் எடப்பாடி அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த பிரச்னையில் தலையிட்டால் வருகிற ஜூலை மாதம் 11ம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியாமல் போகலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். மேலும், இவ்வளவு பணம் செலவு செய்தும் அதிமுக பொதுச்செயலாளர் பதவி என்ற கனவு தனது கையை விட்டு சென்றுவிடுமோ என்று எடப்பாடி பழனிசாமியும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ்சும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவியை தக்கவைத்துக்கொள்வது, மேலும் வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த விடாமல் செய்வதில் உறுதியாக உள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்துக்கு சென்று இதற்கு தடை பெற்றே தீர வேண்டும் என்பதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் முதல் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். இந்த பிரச்னை விஸ்வரூபம் ஆகினால் அதிமுக கட்சி, கொடி மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஒரு நிலை வந்தாலும் பரவாயில்லை, அதிமுகவை தொண்டர்கள் உதவியுடன் கைப்பற்றுவதில் ஓபிஎஸ் தொடர்ந்து உறுதியாக உள்ளார் என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதேநேரம், எடப்பாடி அணியினரும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: