பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி அணிக்கு தாவினர்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு 15 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருந்தது. அதில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களாக எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். தற்போது பன்னீர்செல்வம் அணியில் 5 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே உள்ளனர்.

அதில் முக்கியமானவர் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன். இதனால் இந்த மாவட்டத்தில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்று காலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவருக்கு ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2440 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது பன்னீர்செல்வம் அணியில் இருந்து ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமி அணிக்கு இழுக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஒருவரைக் கூட இழுக்கும் வேலையை பன்னீர்செல்வம் தொடங்கவில்லை. அதற்கு காரணம், கட்சி இன்னும் தன் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்சிக்கு தான் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார். இதனால் அடுத்த உட்கட்சி தேர்தல் வரும்வரை தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவர் ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களை இழுக்கும் வேலை ஓரிரு நாளில் தொடங்கும் என்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள்.

Related Stories: