தீவிரவாத அச்சுறுத்தல், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை: ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை: கடல் மார்க்கமாக தீவிரவாதம் அச்சுறுத்தல் மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர மாவட்டங்களில் ‘சாகர் கவாச்’ என்ற 48 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் போலீசாரே தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாக கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர பாதுகாப்பு படை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அந்த வகையில் தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் 48 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறம் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்துடன் போலீசாரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி என 12 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையை கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்துகின்றனர். இதில், போலீசாரே டம்மி வெடிகுண்டுகள், டம்மி துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் போல் படகு மூலம் தமிழக கடற்கரை மார்க்கமாக உள்ளே நுழைவது போலவும், போதை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் தமிழகத்திற்குள் கடத்தி வருவது போலவும் ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி தலைமையில் நடந்து வருகிறது. காட்டுப்பள்ளியில் படகு மூலம் தீவிரவாதிகள் போல் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் மீனவர்கள் போல் ஊடுருவ முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள், டம்மி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை பொறுத்தவரை மெரினா முதல் கோவளம் வரை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படை, போலீசார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அனைத்து தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. பேருந்துகளிலும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். இதுதவிர வணிக வளாகங்கள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையால் தமிழக கடலோர மாவட்டங்களில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து படகுகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் பாதுகாப்பு ஒத்திகையில் தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய படகுகள், டம்பி வெடி குண்டுகள், டம்பி துப்பாக்கிகள், அரிவாள் உள்ளிட்ட டம்மி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையால் கடலோர மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: