சென்னை: மாதவரத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது, விஷ வாயு தாக்கி வாலிபர் இறந்தார். மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (26). இவர் கொளத்தூர் மாதனாங்குப்பத்தில் தங்கி, மாதவரம் மண்டலம் குடிநீர் வழங்கல் வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வழங்கல் வாரியத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து, நெல்சன் மற்றும் ரவிக்குமார் (40) ஆகிய இருவரும் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்று பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து மயங்கி உள்ளே விழுந்துள்ளனர். வெகு நேரமாகியும் இருவரும் மேலே வராததால், அங்கே நின்று கொண்டிருந்த சக தொழிலாளர்கள் பாதாள சாக்கடைக்குள் எட்டிப் பார்த்தபோது நெல்சன், ரவிக்குமார் ஆகிய இருவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் 4 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நெல்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.