தி.நகரில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சென்னை தி.நகரில் மட்டும் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மகேஸ்குமார், கமிஷனர் (பொறுப்பு) பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது, கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகள் குறித்து தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார். கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா  நேரத்தில் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் நேற்றைய கூட்டத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நேரமில்லா நேரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் காலை 10 மணிக்கு  தொடங்கிய கூட்டம் 11.30 மணிக்கு நிறைவடைந்தது. மன்ற கூட்டத்தில் மொத்தம்  100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தி.நகரில் வாகன நிறுத்த கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது தி.நகரில் பிரீமியம் பார்க்கிங் கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு காருக்கு ரூ.40ம், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.10ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி கார்களுக்கான கட்டணம் ரூ.20 உயர்த்தப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு ரூ.60 ஆக வசூலிக்கப்படும். மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டு உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. சென்னையை பொறுத்த வரை 83 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தி.நகர் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கார்களுக்கான கட்டணம் ரூ.20 ஆகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் ரூ.5 ஆகவும் இருக்கும். டிரோன் மூலம் கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு குறைந்த விலைப்புள்ளி அறிவித்த தமிழ்நாடு ஆளில்லா வான்வழி கழகத்துக்கு பணியை வழங்கியமைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. 32 பள்ளிகளில் மாண்டிசோரி உபகரணங்கள் வழங்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.

தூய்மை இந்தியா சேமிப்பு நிதியின் கீழ், மழைக்காலங்களில் வெள்ள நீரை வெளியேற்ற ஏதுவாக 3.5 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட நீர்வழி தடங்களை சுத்தப்படுத்தும் பணிக்காக ரூ.13 கோடியில் 2 ‘ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கலேட்டர்’ உபகரணங்களும், 5 ஆண்டு காலத்துக்கு இயக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு ரூ.9.90 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.22.90 கோடியில் கொள்முதல் செய்ய மின்னணு ஒப்பம் கோரப்படும். பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்போடு சாலை வாகன நிறுத்த மேலாண்மையை பொறுத்தவரை மண்டலம் 1 முதல் 7 வரை மற்றும் 11 முதல் 15 வரையிலான மண்டலங்களில் புதிய டெண்டர் கோரப்படும் உள்ளிட்ட 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

* கட்டண உயர்வு ஏன்?

தி.நகரில் மட்டும் வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது ஏன்? என்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள்  விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘ஸ்மார்ட்  சிட்டி’ திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடமாக பார்க்கிங் பகுதி வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்பு செலவினம் அதிகமாக இருப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: